என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து- பைக் மீது கார் மோதி விவசாயி பலி
- பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்டம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
- திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி நெரிசலும், விபத்துகளும் நடந்து வருகிறது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ்(51). இவர் தனது நண்பரான இளங்கோ(52) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை 5 மணியளவில் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு சென்று திரும்பிய வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்து வந்த இளங்கோ படுகாயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து நடந்து சுமார் அரைமணிநேரம் கழித்து அதே இடத்தில் மற்றொரு விபத்து நடந்தது. விழுப்புரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சுரேஷ்(25) என்பவர் ஓட்டிவந்தார். காரில் ஆறுமுகம்(40), மணிவண்ணன்(55), வீரப்பா(50), ராஜவேல்(30), குமரகுரு(45), முருகதாஸ்(25) ஆகியோர் வந்தனர்.
செங்குளத்துப்பட்டி பிரிவில் கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் வந்த அனைவரும் இடிபாடிகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் சுரேஷ் மற்றும் ராஜவேல் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த இரு விபத்துகள் குறித்தும் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலையில் தற்போது மண்டல பூஜைக்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்டம் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 வாகனங்கள் வருவதால் சாலை விரிவாக்கம் இல்லாத நிலையில் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி நெரிசலும், விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பக்தர்கள் விபத்தின்றி பயணம் மேற்கொள்ள போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முக்கிய இடங்களில் எச்சரிக்கை தடுப்புகளும் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.