என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விராலிமலை அருகே பஸ் ஸ்டாப்பில் கார் மோதி விபத்து: வங்கி ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
- முரளி அவரது நண்பர் ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் நண்பர் ஆகிய 4 பேரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.
- விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இன்று நடந்த கோர விபத்தில் வங்கி ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
திருச்சி உறையூர் லிங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 37). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கார் லோன் ஒதுக்கீடு செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருடன் ரவிக்குமார் என்பவர் அதே வங்கியில் கிரெடிட் மேலாளராக பணியாற்றி வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
இதற்கிடையே முரளி திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியில் பணியாற்றி வந்தபோது அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகை அடமானம் வைத்துள்ளார். இந்த நகையை திருப்புவதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு வாடகை காரில் முரளி தனது நண்பர் ரவிக்குமாருடன் தென்காசி புறப்பட்டு சென்றார்.
பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலை அவர்கள் தென்காசியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட தயாராகினர். அப்போது முரளியின் தென்காசி நண்பர் சுரேஷ் சேர்ந்து கொண்டார். அவர் தன்னை திருச்சி விமான நிலையம் பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே சுரேஷின் நண்பரும் (பெயர் விபரம் தெரியவில்லை) திருச்சி வர விரும்பியுள்ளார். பின்னர் முரளி அவரது நண்பர் ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் நண்பர் ஆகிய 4 பேரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.
காரினை திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த கணேஷ் குமார் ஓட்டி வந்தார். இந்த கார் மதுரையை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது இன்று காலை 6.40 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை லஞ்சமேடு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்குள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் கணேஷ் குமார், ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் இன்னொரு நண்பர் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தனர்.
அடமானம் வைத்த நகையை மீட்க சென்ற முரளி மட்டும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். உடனே அவரை கொடும்பாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை கொண்டு சென்றனர்.
விபத்து பற்றி அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் இலுப்பூர் துணை போலீஸ் காயத்ரி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் யாரும் நிற்கவில்லை. இதனால் மேலும் உயிர்பலிகள் ஏற்படவில்லை.
பஸ் நிறுத்த நிழற்குடையில் கார் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் விராலி மலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






