என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராயக்கோட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 2 பேர் பலி
- படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சை க்காக உத்தனபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நாகமங்கலம் கூத்தனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது23). டிரைவரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பசப்பா மகன் கார்த்திக் (24), பதின்குமார் (24), உள்ளுக்குறுகை பகுதியைச் சேர்ந்த சுமேஷ் (24), ரமேஷ் (24), சத்தியமூர்த்தி (24) ஆகிய 5 பேருடன் காரில் நேற்று இரவு ராயக்கோட்டைக்கு வந்தார்.
அப்போது ராமமூர்த்தி ஓட்டி வந்த கார் ராயக்கோட்டை அருகே தருமபுரி-ஓசூர் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் பாளேபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளனாது.
இதில் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார்த்திக், சுமேஷ், ரமேஷ், சத்தியமூர்த்தி, பதின்குமார் மற்றும் எதிரே காரில் வந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பா (40) ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தில் பலியான ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சை க்காக உத்தனபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதில் கார்த்தி ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சுமேஷ், ரமேஷ், பதின்குமார், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு காரில் வந்த டிரைவர் முனியப்பாவை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






