என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் ஏற்ற இறக்கங்களை கண்டவர் விஜயகாந்த்
- காவிரி பிரச்சினைக்காக தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
- இருபெரும் தலைவர்கள் அரசியல் கோலோச்சிய காலத்தில், அவர்களை எதிர்த்து துணிச்சலாக அரசியல் செய்தவர் விஜயகாந்த்.
சென்னை:
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, முன்னணி கதாநாயகனாக வந்த விஜயகாத்துக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தனது படத்தில் அரசியல் கருத்துகள் மற்றும் ஏழைகளுக்காக பேசும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால் புரட்சிக்கலைஞர் என்ற அடைமொழியுடன் வெற்றி வாகை சூடிய விஜயகாந்த், 2005-ம் ஆண்டுக்கு பிறகு கேப்டனாக தமிழக அரசியலில் மிளிர தொடங்கினார்.
2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து, அதற்கென்று தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். தனது சினிமா படங்களிலும் அந்த கொடியை பயன்படுத்தினார்.
2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது மன்ற உறுப்பினர்கள் போட்டியிட அனுமதி வழங்கினார். இதில் பலரும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி தான், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு முதல்படியாக அமைந்தது.
ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் விஜயகாந்தை நேரடி அரசியலுக்கு வர வற்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து அரசியலுக்கு வர முடிவு செய்தார் விஜயகாந்த். அதன்படி 2005-ம் ஆண்டு மதுரையில் மக்கள் வெள்ளத்தில், பிரமாண்ட மாநாடு நடத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
தொண்டர்களாக மாறிய ரசிகர்களின் கரகோஷத்திற்கு இடையே தனது கட்சி பெயரை அறிவித்தார்.
இதன் பிறகு 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து களம் கண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் முதன் முறையாக போட்டியிட்டார்.
தமிழகம் முழுவதும் அவரது பிரசாரத்துக்கு மக்கள் கூட்டம் பெருமளவில் திரண்டது.
நான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடனும், தெய்வத்துடனுமே கூட்டணி என்று அவர் பேசிய பேச்சு மக்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் அவர் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஆம்! அந்த தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும், அவரது கட்சி 8.36 வாக்கு சதவீதத்தை பெற்று இருந்தது.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக திகழும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்தது தே.மு.தி.க.
அதன் பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் விஜயகாந்த், தனித்தே போட்டியிட்டார். அப்போது வெற்றி இலக்கை பெற முடியாவிட்டாலும் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் ஏறுமுகத்தை கண்டது.
இதுவே பின்னாளில் அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க, மற்ற கட்சிகள் முன் வந்தன.
பின்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். இந்த தேர்தலில் தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது.
அப்போதைய விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த்.
முதல் தேர்தலில் தனியொரு ஆளாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த விஜயகாந்த், 2-வது தேர்தலில் 29 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.
ஆனால், அ.தி.மு.க.வுடனான கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் விஜயகாந்த்.
சட்டமன்ற கூட்டத்தின்போது ஆளும் கட்சியினரை பார்த்து, அவர் பேசிய பேச்சுகள் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உங்களுக்கு தைரியம் இருந்தால் தனித்து நில்லுங்கள் பார்ப்போம் என்றார்.
இதையடுத்து அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்தார் விஜயகாந்த். அடுத்து நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தே.மு.தி.க. தனித்து களம் இறங்கியது.
இதனிடையே அவரது கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. தலைமையில் ஒரு கூட்டணி உருவானது. அதில் பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இந்த தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெறவில்லை.
காவிரி பிரச்சினைக்காக தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் விஜயகாந்த்.
இதற்காக அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதியை, நீண்டநாளுக்கு பிறகு நேரில் சந்தித்தார். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மீது விஜயகாந்துக்கு தனி மரியாதை உண்டு.
2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி உருவாகும் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி என்ற அணியில் தே.மு.தி.க. இணைந்தது.
இந்த அணியில் ம.தி.மு.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்த கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அவரும் உளுந்தூர்பேட்டையில் களம் இறங்கினார்.
தேர்தல் முடிவு வேறு மாதிரியாக அமைந்தது. ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சரானார். தி.மு.க. 89 இடங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியானது. மக்கள் நல கூட்டணி தோல்வியை சந்தித்தது. விஜயகாந்தும் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
இந்தநிலையில்தான் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விஜயகாந்த் குறைத்துக்கொண்டார்.
அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதையடுத்து நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில்தான் கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழுவுக்கு வந்த தொண்டர்கள் விஜயகாந்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விஜயகாந்த் நேற்று காலை மரணம் அடைந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியல் கோலோச்சிய காலத்தில், அவர்களை எதிர்த்து துணிச்சலாக அரசியல் செய்தவர் விஜயகாந்த்.
தமிழகத்தின் இருபெரும் சக்திகளுக்கு மாற்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், உடல் நிலை காரணமாக அந்த இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது.
அனல் பறக்கும் பேச்சால் அரசியல் கட்சிகளை தெறிக்க விட்ட விஜயகாந்தை, உடல் நலக்குறைவு அவரை வீட்டிற்குள்ளே முடக்கி போட்டது.
விஜயகாந்தால் எழுச்சி கண்ட தே.மு.தி.க.வும், நேசம் கொண்ட தொண்டர்களும் அவரின் இழப்பால், பெரும் சோகத்தில் தவித்து வருகிறார்கள்.






