search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைமைச் செயலகத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
    X

    தலைமைச் செயலகத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

    • அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.

    சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதுமட்டுமின்றி சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருமண மண்டபங்கள், ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து முதலில் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு அதில் மாற்றம் கொண்டு வந்து வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாற சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தவிர தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×