search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.க. ஆதரவு பெற்ற எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும்: அண்ணாமலை
    X

    தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.க. ஆதரவு பெற்ற எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும்: அண்ணாமலை

    • தீபாவளி சமயத்தில் மட்டும் 20 கொலை, கொள்ளைகள் தமிழகத்தில் நடந்துள்ளது.
    • 2026-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    அரியலூர்:

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று அவர் அரியலூர் மாவட்டத்தில் யாத்திரையை தொடங்கினார். ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மாரியம்மன் கோயிலின் அருகிலிருந்து யாத்திரையை தொடங்கி பஸ் நிலையம் அருகே முடிந்தது. அப்போது, அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியாக யாத்திரையில் பங்கேற்று வருகிறேன். தமிழகத்தில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை. இதனை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது.

    ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சியடையும்போது தான், தமிழகம் வளர்ச்சி அடையும். மது இல்லா தமிழகம், கொலை, கொள்ளை இல்லா தமிழகம் உருவாக பா.ஜ.க. யாத்திரை மேற்கொண்டுள்ளது. தி.மு.க. 2½ வருட ஆட்சியை முடித்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்பொழுது குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக்குக்கு இலக்கு வைத்து விற்பனை செய்தது.

    இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் மட்டும் 20 கொலை, கொள்ளைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். அனைத்து ஏழை, எளிய குழந்தைகளை மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என மத்திய அரசு வழங்கி வருகிறது. தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளும் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், தி.மு.க. பிரமுகர்கள் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் முன் நாடகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்தும் வருகிறார்கள். 2026-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தை 35 ஆண்டுகள் கழித்து தற்போது விவசாயிகளிடமே ஒப்படைப்பதாக தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவை அரியலூர் மாவட்டத்தில் பெருகி இருக்கும்.

    தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழல் மிகுந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்கள் விவசாயிகள் சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களுக்கான அரசாக கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஊழல் குறை சொல்ல முடியாத அரசாங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். எனவே வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, அரியலூரில் அண்ணாமலை பேசுகையில், கடந்த 1976-ம் ஆண்டு முதல் 2013 வரை இந்தியாவில் திருடப்பட்ட சிலைகளில் 13 சிலைகள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் திரும்ப பெறப்பட்டன. மோடி பிரதமரான பிறகு 351 சிலைகள் திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளது. தி.மு.க. 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என கொடுக்கும் என கொடுத்த அறிக்கை பொய்யானது. அப்படி வேலை வழங்க வேண்டும் எனில் ஆண்டுக்கு 4 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வை நடத்த வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.க. ஆதரவு பெற்ற எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் அரியலூரில் அண்ணாமலை பா.ஜ.க. ஆதரவு எம்.பி.யை தேர்தெடுக்க வேண்டும் என்று பேசியிருப்பது மீண்டும் கூட்டணி அமைவதற்கான அச்சாரமாக இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×