என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் மதுவால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தில் மதுவால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

    • தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர்.
    • மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர்.

    நிலக்கோட்டை:

    என் மண், என் மக்கள் பிரசார பயணத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நிலக்கோட்டையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தென்தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு எந்த திட்டத்தையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நிலக்கோட்டை மல்லிகை பூக்கள்தான் உலகம் முழுவதும் மதுரை மல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். நிலக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மது அருந்தி மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடியதாக நாளிதழ் மூலம் அறிந்தேன். மேலும் பல்லடம் பகுதியில் குடிபோதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கும்பல் வெட்டி கொலை செய்தது. தமிழகத்தில் மதுவால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    ஆனால் தி.மு.க. அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. பெரும்பாலான மதுஆலைகள் தி.மு.க. பிரமுகர்களின் ஆலைகளாக உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளை மூட தி.மு.க. நடவடிக்கை எடுக்காது. மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

    மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர். 10 சதவீத தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    மோடி பிரதமராவதற்கு முன்பு நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. தற்போது உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு சந்திராயன் 3 மூலம் நிலாவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் இந்தியா வளர்ந்து வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார்.

    உச்சநீதிமன்றம் நோக்கி கர்நாடகம் செல்கிறது. தமிழகத்தின் வாதங்கள், விவசாயிகளின் கஷ்டத்தை உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ளும். காவிரி நீர் வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். இதில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமார் காவிரி நீர் தரமாட்டேன் என பேசி வருகிறார். மேகதாது அணை கட்ட குறியாக இருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும்.

    இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போதிய அளவு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் ஒரு எப்.ஐ.ஆர்.கூட போடவில்லை. கைது நடவடிக்கை இல்லை. ஏ.ஆர்.ரகுமான் அவரது பணியை சரியாக செய்துள்ளார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் சரியாக செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×