search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊழல்வாதியை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    குமரி சங்கமம் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை செங்கலை தூக்கி காட்டி பேசிய காட்சி.

    ஊழல்வாதியை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

    • மோடி காலில் உள்ள நகத்தில் இருக்கும் அழுக்குக்கு கூட அமைச்சர் மனோ தங்கராஜ் தகுதி இல்லை.
    • பொது சிவில் சட்டம் வரும்போது குமரி மாவட்டம் பயன்பெறும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1969-ல் காமராஜர் குமரி மண்ணில் போட்டியிட்டபோது கருணாநிதி, நாடார் சமூகத்தை இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என பிரித்தார். அதையெல்லாம் தாண்டி காமராஜர் வெற்றி பெற்றார்.

    அப்போது கருணாநிதியிடம் கருத்து கேட்டதற்கு, நடந்தது பாராமன்ற தேர்தல் அல்ல. நாடார்மன்ற தேர்தல் என்றார். அந்த சமூகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் கட்சி தி.மு.க. அதன்பிறகு 1971-ல் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி குமரிக்கு வரவில்லை. ஏன் என கேட்டதற்கு நெல்லை எங்கள் எல்லை. குமரி எங்கள் தொல்லை என்றார்.

    அதே சமயம் இங்கு பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி குமரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக பாவித்தார். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது.

    மீனவர்களின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி. மீனவர்களுக்கு மோடி என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம். முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கியது பிரதமர் மோடி தான். மீன் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியாவை பிரதமர் மோடி உயர்த்தி இருக்கிறார்.

    அதே சமயம் தி.மு.க. என்ன செய்தது என்றும் சொல்ல வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என சொன்னார்கள். ஆனால் ஒரு வீடு கூட தமிழகத்தில் கட்டிக்கொடுக்கவில்லை.

    மீன்பிடி துறைமுகம் கட்டிக்கொடுக்கவில்லை. ரப்பர் உதிரி பாகம் தயாரிப்பு நிலையம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரப்பர் பூங்கா, நாகர்கோவில் தொழில்பேட்டை எதுவும் கட்டிக்கொடுக்கவில்லை. 571 வாக்குறுதிகளில் கன்னியாகுமரிக்கு எதுவும் செய்து தரவில்லை.

    இதனை கேட்டால், உடனே எய்ம்ஸ் எங்கே என கேட்பார்கள். நாட்டில் வடக்கிலும், கிழக்கிலும் எய்ம்ஸ் உள்ளதால் தெற்கிலும் கட்ட வேண்டும் என்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். 2026 மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    புதிய பாராளுமன்றம் கட்டிடம் முன் பிரதமர் சாஸ்டாங்கமாக வணங்கியதை அமைச்சர் மனோ தங்கராஜ், மூச்சி இருக்கா? உயிர் இருக்கா? என கேட்டுள்ளார். இவரை கயிற்றில் கட்டி கடலில் போட்டால் கூட கடல் ஏற்று கொள்ளாது.

    மோடி காலில் உள்ள நகத்தில் இருக்கும் அழுக்குக்கு கூட அமைச்சர் மனோ தங்கராஜ் தகுதி இல்லை. எனவே அடுத்த தேர்தலில் அவர் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றார் என்பதை நீங்கள் கொடுக்க வேண்டும்.

    ஒரு அமைச்சர் 1000 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் தடுப்புச்சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால் அமலாக்கத்துறை சோதனை செய்து நடவடிக்கை எடுத்ததும் எவ்வளவு வேகமாக ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள். அரசு எந்திரம் தயாராக இருக்கிறது. கோர்ட்டில் சென்று அரசு மருத்துவமனை செட்டாகாது, அது ஏழை மக்களுக்கு கட்டி வைக்கப்பட்டது என்று கூறி தனியார் மருத்துவமனைக்கு போய் இட்லி சாப்பிடுகிறார்கள்.

    ஒரு ஊழல்வாதியை காப்பாற்றுகிறது இந்த அரசு. ஸ்டாலினை பொறுத்தவரை ஆட்சி என்பது அமைச்சர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் தான்.

    பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் நடுவில் சரத்பவார் அமர்ந்தார். நாங்கள் ஒருங்கிணைந்து விட்டோம் என்றும், எங்கள் ஒற்றுமையை பார்த்து மோடி அஞ்சி விட்டார் என்று கூறினார். ஆனால் மகாராஷ்டிராவில் அவரது கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வந்துவிட்டார்கள். எனக்கு வயதானதால் கட்சியின் செயல் தலைவராக பிரபுல் பட்டேலை நியமிக்கிறேன் என்றார்.

    ஆனால் தற்போது அந்த பிரபுல் பட்டேலே வந்து விட்டார். தற்போது கூட்டத்தின் ஓரத்தில் இருந்த முதலமைச்சருக்கு உதறல் வந்துவிட்டது. தயவு செய்து அடுத்த கூட்டம் நடக்கும் பெங்களூருக்கு போய்விடாதீர்கள். அறத்தின் சாட்சி படி ஆட்சி அமைத்தால் மக்கள் ஆதரவு தருவார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். இந்த நிலையில் பெங்களூரு கூட்டத்துக்கு வடை சாப்பிடவா போகிறீர்கள். மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்கிறார் டி.கே.சிவகுமார்.

    அதையும் மீறி முதலமைச்சர் பெங்களூரு சென்றால் இது களவாணிகளின் கூட்டம் என தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும். பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பி.க்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும். இமயத்திலும், குமரியிலும் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். பிரதமராக மோடி 3-வது முறையாக அரியணையில் அமர்வார்.

    நாட்டில் பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வரப்போகிறார். தமிழக மக்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் என சொல்கிறார்கள். வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் கூட்டம் சொல்கிறது.

    பொது சிவில் சட்டத்தின் முதல் பயனாளி இஸ்லாமிய தாய்மார்கள்தான். திருமணம், விவாகரத்துக்கு என்ன முறை என்பதுபோன்ற வழிமுறைகள் வர உள்ளன. இஸ்லாமிய பெண்களும் தந்தையின் சொத்தில் பங்கு பெறபோகிறார்கள்.

    அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த புரிதலும் இல்லாமல் அதை எதிர்க்கிறார். பொது சிவில் சட்டம் வரும்போது குமரி மாவட்டம் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×