என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில்தான் அரசியல் என்பதை தகுதியாக வைத்தே ஊழல் செய்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
- எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது.
- தமிழகத்தில் வீட்டுக்குள் பட்டா இடத்தில் கொடியேற்றினால் கைது செய்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முன்னரே வருமான வரித்துறை சோதனை நடந்திருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதி என்கிற ஒரு தகுதியை வைத்து ஊழல் செய்து வருகிறார்கள். வருமான வரி சோதனை பற்றி, நான் ஏதாவது சொன்னால், நான் சொல்லித்தான் சோதனை நடத்துகிறார்கள் என்று சொல்வார்கள்.
எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சப் பணத்தை குவிக்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலுவின் பின்னணி என்ன?. அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க.வில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இலங்கை அரசு மேல்முறையீடு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. கடல் கொள்ளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பா.ஜனதாவின் 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறிதான் அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்க உள்ளோம். தி.மு.க.வை பொறுத்தவரை 30 மாத ஆட்சியில் என்ன செய்து இருக்கிறீர்கள் என மக்கள் கேட்பார்கள்.
தமிழகத்தில் வீட்டுக்குள் பட்டா இடத்தில் கொடியேற்றினால் கைது செய்கிறார்கள். நான் இதை ஒருவிதத்தில் ரசிக்கிறேன். இது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். தமிழகத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஆனால் கொடிக்கம்பங்கள் பற்றி தி.மு.க. பேசுகிறது. பா.ஜனதாவை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது.
இந்தியா கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேரம் வரும்பொழுது தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜனதா தலைவர்கள் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






