என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாவட்ட செயலாளர்கள் கருத்து அடிப்படையில் அ.தி.மு.க. இன்று மாலை அதிரடி முடிவு எடுக்கிறது
- அ.தி.மு.க. இல்லாத நிலையில் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளை பாரதிய ஜனதா எதிர்கொள்ள நேரிடும்.
- அ.தி.மு.க. எடுக்கப்போகும் முடிவுகளை பொறுத்துதான் தமிழக அரசியல் களத்தில் 3-வது அணி உருவாகுமா? என்ற சூழ்நிலை தெரியும்.
சென்னை:
அ.தி.மு.க.-தமிழக பாரதிய ஜனதா இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் இன்று மாலை தெளிவான முடிவு எட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க.வுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே சுமூகமான உறவு நீடிக்கவில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 14-ந்தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா டெல்லிக்கு வரவழைத்து பேசினார்.
அந்த சந்திப்பின்போது தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கோரிக்கை விடுத்தார். அந்த 20 தொகுதிகளை பாரதிய ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பகிர்ந்து கொள்வோம் என்று அமித்ஷா தெரிவித்ததாக தகவல் வெளியானது.
கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் அமித்ஷா இந்த திட்டத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. 20 தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா தெரிவித்த கருத்துக்களால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த 18-ந்தேதி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அதை ஏற்காமல் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந்தேதி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் ரகசியமாக கொச்சியில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தமிழக பா.ஜனதாவின் டெல்லி மேலிட பொறுப்பாளர் பியூஸ்கோயல் ஆகியாரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் அதை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து அதிருப்தியுடன் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தமிழகம் திரும்பினார்கள். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர் பாக விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொருவரிடமும் கருத்துக்களை அறிய திட்டமிட்டுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பதா? வேண்டாமா? என்பதை உறுதிப்பட தெரிவியுங்கள் என்று கேட்க உள்ளார். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அ.தி.மு.க.வின் இந்த அதிரடி நடவடிக்கையை டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணியில் பிளவு ஏற்படுவதை தடுக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் தொடர்பு கொண்டு மீண்டும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை அந்த சமரச முயற்சி நீடித்தது.
ஆனால் அந்த சமரச முயற்சிகளால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதா? என்பதில் கேள்விக்குறி வலுத்து வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே இன்றே ஒரு முடிவுக்கு வந்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் எது பெரும்பான்மையாக இருக்கிறதோ? அதன் அடிப்படையில் முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து விடலாம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தும்பட்சத்தில் கூட்டணி உடைவது உறுதியாகி விடும்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருந்தால் சில தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினால் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் அமித்ஷாவுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களு டன் விளக்கமாக தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க.வின் 5 தலைவர்கள் நட்டா, பியூஸ்கோயலுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களும் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படும். அதில் ஏற்படும் ஒருமித்த முடிவு அ.தி.மு.க.வின் முடிவாக எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எந்த முடிவாக இருந்தாலும் அதை இன்று மாலை அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஜெயக்குமார் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். இது பாரதிய ஜனதா டெல்லி தலைவர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. எனவே அ.தி.மு.க. அதிரடி முடிவு எடுத்தால் அதற்கேற்ப பதிலடி கொடுக்கும் முடிவுகளை எடுக்க பாரதிய ஜனதாவும் தயாராகி வருகிறது.
அ.தி.மு.க. இல்லாத நிலையில் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளை பாரதிய ஜனதா எதிர்கொள்ள நேரிடும். எனவே சில சிறிய கட்சிகளை சேர்த்துக்கொண்டு 3-வது அணி அமைப்பது பற்றி பாரதிய ஜனதா நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிகிறது. அந்த 3-வது அணி பாரதிய ஜனதா தலைமையில் அமையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. மூலம் கிடைக்கும் வாக்குகள் இழப்பை சரி கட்டுவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை பாரதிய ஜனதா தனது 3-வது அணி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளையும் இணைத்துக் கொள்ள பாரதிய ஜனதா முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது.
3-வது அணியில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்பதால் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அந்த அணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. 5.25 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. வாக்கு சதவீதம் 2.33 ஆக குறைந்தது.
என்றாலும் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மூலம் 3 முதல் 5 சதவீத வாக்குகளை பெற முடியும் என்று பாரதிய ஜனதா உறுதியாக நம்புகிறது. எனவே அ.தி.மு.க. விலகி செல்லும்பட்சத்தில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொண்டு 3-வது அணியாக பலத்த சவாலை பா.ஜனதா ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. எடுக்கப்போகும் முடிவுகளை பொறுத்துதான் தமிழக அரசியல் களத்தில் 3-வது அணி உருவாகுமா? என்ற சூழ்நிலை தெரியும். எனவே அ.தி.மு.க. இன்று மாலை எடுக்கப் போகும் முடிவு தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






