என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு
    X

    சென்னையில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

    • சென்னையில் இன்று மாலையிலும் இரவிலும் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
    • வடசென்னை பகுதியில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன? என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    சென்னையில் இன்று மாலையிலும் இரவிலும் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூற முடியாது. ஆனால் சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சென்னையில் இன்று காலையில் இருந்தே பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடையாறு, அண்ணாசாலை, வேப்பேரி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    வடசென்னை பகுதியிலும் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) காலையிலும் சென்னையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயலுக்கு பிறகு சென்னை மாநகரில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சென்னையில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு சென்னை மாநகருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, கடலோர மாவட்டங்கள் முழுவதிலுமே மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×