search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்
    X

    விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
    • ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார்.

    இவர் சிவாஜியிடம் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவர் 50 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனக்கு கமிஷனாக ரூ.15 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.35 லட்சத்தை எடுத்து வந்தார்.

    பணத்தை கொண்டு வந்த சிவாஜியிடம் பாண்டி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளார். அதன்படி சிவாஜியும் ராஜ்குமாரிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ராஜ்குமார் பணத்தை ஈரோட்டுக்கு கொண்டு வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து சிவாஜி ஒரு பேக்கில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு வந்தார்.

    மேலும் அவர் தன்னுடன் செந்தில், மாதேஸ்குமார் ஆகியோரை அழைத்து வந்தார். காரை குபேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். சின்னமனூரில் காலை 6 மணிக்கு பணத்துடன் புறப்பட்ட இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் 2 நபர்களுடன் காரில் டீக்கடைக்கு வந்தார். அவர் சிவாஜியை சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம் தனது காரில் இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் சிவாஜி, செந்தில் ஆகியோரை ரூ.35 லட்சம் பணத்துடன் தனது காருக்கு அழைத்து சென்றார். பின்னர் பணத்தை எண்ணி சரிபார்க்கலாம் என்று கூறி பரிசல்துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் அழைத்து சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரை எதிரே வந்த ஒரு கார் வழி மறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை கீழே இறங்க சொன்னார்கள். அவர்களும் காரில் இருந்து இறங்கி னார்கள். பின்னர் காரில் இருந்த ரூ.35 லட்சத்துடன் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த பாண்டியை தேடி சிவாஜி உசிலம்பட்டி சென்றார். அப்போது பாண்டியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×