search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகரில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை பரிதாப பலி- சிறப்பு சிகிச்சையளித்தும் பலனில்லை
    X

    யானை லலிதா இறந்து கிடப்பதை படத்தில் காணலாம். 

    விருதுநகரில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை பரிதாப பலி- சிறப்பு சிகிச்சையளித்தும் பலனில்லை

    • லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது.
    • உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது.

    விருதுநகர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவர் லலிதா என்ற 56 வயது பெண் யானையை வளர்த்து வந்தார். அந்த யானையை கோவில் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார்.

    இந்நிலையில் தனது யானையை வேறு ஒருவருக்கு விற்க அனுமதிக்க வேண்டும் என்று 2020-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் யானையை விற்பனை செய்ய ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து வழக்கம்போல் கோவில் திருவிழாவுக்கு யானையை அழைத்து சென்று வந்தார்.

    அப்போது யானை லலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி விருதுநகர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக சேக்முகமது, யானை லிலதாவை விருதுநகருக்கு லாரியில் அழைத்து வந்தார்.

    லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது. இதில் யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து யானை லலிதா விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    கால்நடைத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் பிராணிகள் நல ஆர்வலர் துனிதா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் யானை லலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் யானையை நேரில் சென்று பார்வையிட்டார். யானை லலிதாவுக்கு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும், யானைக்கு தேவையான உணவுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும், யானை பாகன்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து விருதுநகரில் தங்கியிருந்த யானை லலிதாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்க இருப்பதால் யானையை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆனால் அதற்கு பிராணிகள் நல ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி யானையை அதே இடத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பார்த்து சென்றனர். அதனை அடக்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×