search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தினர்- 70 பேர் மீட்பு
    X

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தினர்- 70 பேர் மீட்பு

    • தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
    • தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்து வந்தது.

    இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் உருவானது. பாறைகளும், மரங்களும் கரை புரண்டு வந்தன. இதையடுத்து ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்ற பலர் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருச நாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    குறிப்பாக மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த சாஜூக் (வயது 48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 70 பேருடன் நேற்று காலையிலேயே வந்தனர். தர்காவில் வழி பாட்டை முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.

    மழையின் வேகம் குறைந் ததையடுத்து ஆற்றிலும் நீர்வரத்து சற்று குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல் ராஜபாளை யம் மேற்கில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றிலும் நேற்று மாலை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    Next Story
    ×