என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அருள்ராயன்.
புளியங்குடியில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம்: கல்யாண மன்னனை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை
- போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அருள்ராயனை கைது செய்தனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் 3 பெண்கள் தானா? அல்லது வேறு சில பெண்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(வயது 25). இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தபோது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அருள்ராயன்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அருள்ராயன் தன்னை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி என கூறி காயத்ரியை திருமணம் செய்து செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் குடும்பம் நடத்திய நிலையில், அருள்ராயன் மேலும் சில பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் அருள்ராயனை விட்டு பிரிந்துவிட்டார்.
இந்நிலையில் தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அருள்ராயன் அடிக்கடி காயத்ரிக்கு போன் செய்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் காயத்ரியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த காயத்ரி புளியங்குடி போலீசில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அருள்ராயனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அருள்ராயன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கவில்லை என்றும், அவர் ராஜபாளையத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் அதிகாரி என கூறி இதேபோல் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்றும், காயத்ரியை 3-வதாக திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்ற 2 பெண்களும் அருள்ராயன் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் கல்யாண மன்னன் அருள்ராயன் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரை முழுமையாக விசாரித்த பின்னரே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பெண்கள் தானா? அல்லது வேறு சில பெண்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அவர் எதற்காக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? அந்த பெண்களின் நகை, பணத்தை அபகரித்து சொகுசாக வாழ திட்டமிட்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தினாரா? என போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.






