search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை- சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
    X

    தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை- சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

    • குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
    • கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

    காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார். நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார்.

    நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.

    நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், 3 மாத குழந்தை தஸ்விக் ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், " கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை.

    கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தையுடன் 6 குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியில் இருந்து மருந்து செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கவனிப்பில் வைக்கப்பட்டு நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதனால், குழந்தை தடுப்பூசி குறைப்பாடால் இறக்கவில்லை.

    குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.

    Next Story
    ×