என் மலர்
தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் இளம்பெண்-வாலிபருக்கு கொரோனா

நாகர்கோவில்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குமரிமாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அந்த இளம்பெண் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர் அவர்களில் யாருக்காவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதேபோல் தென்தாமரைகுளம் அருகே இலந்தயைடிவிளை பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர் குறித்த விவரங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர். இவரும் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருவதால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர்.
கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.