search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழைய குற்றாலத்தில் மிதமாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
    X
    பழைய குற்றாலத்தில் மிதமாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

    பாபநாசம் அணை பகுதியில் லேசான மழை

    மணிமுத்தாறு அணையில் 83.55 அடியும், சேர்வலாறு அணையில் 81.72 அடியும் நீர் இருப்பு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் மட்டும் மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 68.75 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு தற்போது 602.66 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜூன் 1-ந்தேதி முதல் பாபநாசத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிமுத்தாறு அணையில் 83.55 அடியும், சேர்வலாறு அணையில் 81.72 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 54 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா மற்றும் ராமநதி அணைகளுக்கு 21 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கடனா அணையில் 43.80 அடியும், ராமநதியில் 52.25 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளிலும், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். தற்போது மழை குறைந்துவிட்டதால் அருவிகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    Next Story
    ×