search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசனூர் செல்லும் கும்டாபுரம் தரைபாலத்தை மூழ்கடித்து சென்ற காட்டாற்று வெள்ளம்
    X
    ஆசனூர் செல்லும் கும்டாபுரம் தரைபாலத்தை மூழ்கடித்து சென்ற காட்டாற்று வெள்ளம்

    சத்தியமங்கலம், தாளவாடியில் பலத்த மழை- காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள் மூழ்கியது

    தொடர் மழை காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை அழுகி வருகிறது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாளவாடி, அருள்வாடி, பனக்கள்ளி, சிமிட்டகள்ளி, மாதள்ளி, திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, இக்களூர் போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

    தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் தாளவாடி சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த கனமழையால் தாளவாடி பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட ஓடைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    காட்டாற்று வெள்ளம் காரணமாக தாளவாடி அடுத்த சிமிட்ட கள்ளியில் இருந்து மாதள்ளி செல்லும் சாலையில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையில் கும்டாபுரம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது அந்த தரைபாலத்தை மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடக்க முயன்றபோது மழை வெள்ளத்தில் சிக்கினர்.

    இதனால் அவர்களால் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் திகனாரையில் இருந்து கரளவாடி செல்லும் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ்நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது.

    தொடர் மழை காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை அழுகி வருகிறது. இதேபோல் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்துள்ளனர். இங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் மல்லிகைப்பூக்களும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பல விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளது. நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தாளவாடி அடுத்த எரகனகள்ளி அருகே பெளிரங்கா என்ற குளம் 20 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக நிரம்பி உள்ளது. மேலும் தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தடுப்பணைகள் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

    மேலும் இந்த மழை நீரானது கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணையில் வீணாக கலந்தது. இதை தடுக்கும் வகையில் இந்தப் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    Next Story
    ×