என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலி மதுபாட்டில்கள்
    X
    காலி மதுபாட்டில்கள்

    நீலகிரியில் 10 இடங்களில் காலி மதுபாட்டில்களை வாங்கும் ‘பை பேக்’ திட்டம் தொடங்கியது

    நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு, காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளைநிலங்களிலும் வீசி செல்கின்றனா்.

    வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுப்பட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது.

    இதனைத் தடுக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் தலைக்குந்தா பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும், ஊட்டி நகர சுகாதார மையம் அருகிலும், கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியிலும், கோத்தகிரியில் கட்டபெட்டு சந்திப்பு பகுதியிலும், பைக்காரா பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் குந்தா பிக்கட்டி கடைவீதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும், குன்னூரில் வண்டிசோலையில் பாரஸ்ட்டேல் சாலை பகுதியிலும், கூடலூா் நகரில் சில்வா் கிளவுட் அருகிலும், பந்தலூரில் தாளூா் சோதனைச்சாவடி அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ள காலி மதுபாட்டிலுக்கான சேகரிக்கும் மையத்தில் காலி மது பாட்டில்களை ஒப்படைத்து, நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியையும், விளைநிலங்களையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×