என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பழையகாயல் பகுதியில் உப்பளத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    பழையகாயல் பகுதியில் உப்பளத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை, தென்காசியில் சாரல் மழை- தூத்துக்குடியில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

    உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான தேரியூர், ஆண்டிவிளை, செட்டியாபத்து, சிவலூர், கொட்டங்காடு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
    முள்ளக்காடு:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென வானில் மேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. சேரன்மகாதேவி, களக்காடு, கன்னடியன் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

    திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 22 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    வள்ளியூர் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ரெயில்வே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அதில் ஆ.திருமலாபுரம் ஊருக்கு சென்ற மினிபஸ் சிக்கி கொண்டது. அதில் இருந்த பயணிகள் தண்ணீரில் இறங்கி நடந்து சென்றனர்.

    அணை பகுதிகளில் நேற்று மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி முதல் கனமழை பெய்தது. காலை 6 மணி வரை மாநகர பகுதிகளான பிரையண்ட் நகர், திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், முள்ளக்காடு, முத்தையாபுரம், பழைய மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

    பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் பெய்த கனமழையால் தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மாநகர பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    முள்ளக்காடு, பழைய காயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பணிகள் முடங்கின.

    உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வடிய இன்னும் 10 நாட்கள் ஆகும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அதற்குள் மழை பெய்துவிட்டால் மீண்டும் உப்பு உற்பத்தி முடங்கிவிடும் என உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தை பொறுத்தவரை சாத்தான்குளம், சூரங்குடி, வைப்பார், கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. எட்டயபுரம், வேடநத்தம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, கழுகுமலை, காடல்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக சூரங்குடியில் 36 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 34 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான தேரியூர், ஆண்டிவிளை, செட்டியாபத்து, சிவலூர், கொட்டங்காடு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் முருங்கை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கமாக கோடை காலங்களில் முருங்கை காய் விலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது மழை காரணமாக முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ½ மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சிவகிரி, கடையநல்லூர், பண்பொழி, ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
    Next Story
    ×