என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டையை சேர்ந்த 15 பேரிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் பண மோசடி- 3 பேர் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 25). பட்டதாரியான இவர் தகுந்த வேலை தேடிக்கொண்டு இருந்தார். பல்வேறு நிறுவனங்களுக்கும் வேலை வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் முத்துக்குமரனை நெய்வேலியை சேர்ந்த, தற்போது விராச்சிலையில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் (46), சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த முகமதுல்லாபீர் (38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மன்சூர் உல்லாகான் (41) ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அவரிடம் மத்திய அரசு அதிகாரிகளுடன் தங்களுக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர்கள் மூலம் விமான நிலையம் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி நம்பிக்கை அளித்துள்ளனர்.
அதன்பேரில் முத்துக்குமரன் உள்ளிட்ட அதே பகுதியை சேர்ந்த வேலை தேடுவோர் 15 பேரிடம் ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை வசூல் செய்துள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேலையில் சேர்வதற்கான அழைப்பாணை வீடு தேடி வரும், அதுவரை காத்திருங்கள் என்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாதங்கள் பல கடந்தும் வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு கடிதமும் முத்துக்குமரன் உள்ளிட்ட யாருக்கும் வரவில்லை. சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முறையான பதிலை அளிக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித்தர மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 15 பேரும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் வசதி படைத்தவர்கள் பலரை குறிவைத்து விமான நிலையம், மத்திய அரசு பணி என்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.






