என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை யானை மிதித்து பலியான திம்மப்பா நாயுடு உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி.
    X
    வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை யானை மிதித்து பலியான திம்மப்பா நாயுடு உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி.

    வேப்பனப்பள்ளி அருகே இன்று காலை ஒற்றை யானை மிதித்து விவசாயி பலி- கிராம மக்கள் பீதி

    வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி எப்ரி மகாராஜகடை ஆகிய வனப்பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை நாசம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அந்த யானை, அங்கிருந்த விவசாய பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தது.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி திம்மப்பா நாயுடு (வயது 70) என்பவர் தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்து நின்ற ஒற்றை யானை, திம்மப்பா நாயுடுவை பார்த்ததும் விரட்ட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், யானையிடம் இருந்து தப்பிக்க தலைத் தெறிக்க ஓடினார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு வந்த ஒற்றை யானை திம்மப்பா நாயுடுவின் தலையில் மிதித்தது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் காலையில் வயலுக்கு சென்ற திம்மப்பா நாயுடு நீண்டநேரமாக வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடி பார்த்தனர். அப்போது விவசாய நிலத்தில் ஒற்றை யானை மிதித்து திம்மப்பா நாயுடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதையடுத்து வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், பலியான திம்மப்பாநாயுடு உடலை கைப்பற்றினர்.

    அப்போது விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தால் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

    இதையடுத்து வனத்துறை காப்பாளர் மகேந்திரன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காட்டு யானைகளை உடனடியாக விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து ஒற்றை யானை தாக்கி பலியான திம்மப்பா நாயுடு குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. திம்மப்பா நாயுடு உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நேர்லகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் ஒரு விவசாயியை ஒற்றை காட்டு யானை கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பெரும் பீதியில் இருந்து வருகிறார்கள். 

    Next Story
    ×