search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிஷா
    X
    நிஷா

    திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு நடத்திய பெற்றோர்

    பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு தங்கி விடுவது வழக்கம்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி அமுதா. விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களது மகன் நிஷாந்த் (வயது21). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிஷாந்த் தன் உடலின் பாலியல் செயல்பாடுகள் மாற, தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்தார். பின்னர் தனது பெயரை நிஷா என மாற்றிக்கொண்டார்.

    நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து, உயிரியல் யதார்த்ததை உணர்ந்த அவரது பெற்றோர் நிஷாவை வீட்டுக்கு அழைத்தனர். பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.

    அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை மங்கையாக அவரது பெற்றோர் அங்கீகரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நிஷாவுடன் படித்த பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, விருந்து உபசரிப்பில் பங்கேற்றனர்.

    பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு தங்கி விடுவது வழக்கம். அவ்வாறு செல்பவருக்கு மூத்த திருநங்கைகள், மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, அவரை பெண்ணாக அங்கீகரிப்பதுண்டு. இந்நிகழ்ச்சியை முதன்முறையாக ஒரு திருநங்கையின் குடும்பத்தினரே செய்து உள்ளனர்.
    Next Story
    ×