என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுத்தை நடமாட்டம் காரணமாக வெறிச்சோடிய இருகாலூர் கிராமம்
    X
    சிறுத்தை நடமாட்டம் காரணமாக வெறிச்சோடிய இருகாலூர் கிராமம்

    நம்பியூர் அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்தது- விடிய விடிய தேடுதல் வேட்டை

    இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் வடக்குவீதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 28 கோழிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

    தொடர்ந்து அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து 3 ஆடுகளையும், அடுத்த நாள் செட்டியம்பதி என்ற பகுதியில் 2 ஆடுகளையும் மர்ம விலங்கு அடித்து கொன்றது.

    தொடர்ந்து கால்நடைகளை மர்மவிலங்கு தாக்கி வந்ததால் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால்தடங்கைள ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆடு, கோழிகளை அடித்து கொன்றது சிறுத்தை என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் 5 இடங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

    பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி கொள்ளும் சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து காட்டு பகுதிக்கு பொதுமக்கள் தனியாக செல்ல கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் என்ற கிராமத்தில் பொன்காத்த அய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தை அந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன், வனத்துறை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுத்தை பதுங்கி இருந்த பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அங்கு 6 தானியங்கி கேமராக்களை பொருத்தினர்.

    மேலும் இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினருடன் கிராம மக்களும் சேர்ந்து கொண்டு செல்போன் டார்ச்லைட் மற்றும் மின்விளக்குகள் மூலம் விடிய விடிய சிறுத்தையை தேடினர்.

    மேலும் இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமமே வெறிச்சோடியது.

    வனத்துறையினர், தன்னார்வலர்கள் பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் 2 பிரிவாக பிரிந்து இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதேபோல் பொன்காத்த அய்யன் கோவில குளத்து பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட ஏழூர் கிராமம் பகுதியில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு-திருப்பூர் எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் புகுந்த சிறுத்தை திருப்பூர் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறுத்தை ஊருக்குள் நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×