search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று- ஈரோட்டில் இதுவரை 30 போலீசார் கொரோனாவால் பாதிப்பு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்றுவரை 30 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், முன்கள பணியாளர்கள் போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

    இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. ஏற்கனவே சூரம்பட்டி பெண் இன்ஸ்பெக்டர், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர், கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு என 6 போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து மற்ற போலீசாருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 30 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.

    இவர்களில் ஒரு சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள போலீசாருக்கு தொற்று வேகமாக பரவி வருவதால் மற்ற போலீசார் கலக்கத்தில் உள்ளனர். தடுப்பு நடவடிக்கையாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பகுதியில் ஈரோடு கிளை சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கைதிகளில் ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் நேற்று மாலை மூன்று கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக கிளைசிறை முழுவதும் கிருமிநாசினி செலுத்தப்பட்டது. மற்ற கைதிகள் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×