search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில்பட்டி விநாயகர் நகரில் தடை செய்யப்பட்ட பகுதி என பேனர் கட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கோவில்பட்டி விநாயகர் நகரில் தடை செய்யப்பட்ட பகுதி என பேனர் கட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை

    கோவில்பட்டியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் வசித்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவித்து நகராட்சி அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

    உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.

    தென்மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலும் மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் மூலமாகவே நெல்லை, தென்காசி, குமரிக்கு வெளிநாட்டவர்கள் வருவார்கள் என்பதால் அங்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    அதன்பின்னர் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து கணவன்-மனைவி, 7 வயது மகள் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்தனர்.

    பசுவந்தனை சாலையில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் கொரோனா பரிசோதனை செய்திருந்தனர். அப்போது அவர்களுக்கு நெகட்டிவ் வந்திருந்தது.

    இந்நிலையில் அவர்கள் 3 பேருக்கும் கடந்த 21-ந்தேதி தலைவலி, தொண்டைவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள பெற்றோர் உள்பட 9 பேர் கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை செய்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் 7 வயது சிறுமியை தவிர மற்ற 8 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து 8 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என சுமார் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அந்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என நகராட்சி அதிகாரிகள் அறிவித்து பேனர் வைத்தனர். மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடரும் போடப்பட்டது.

    இதற்கிடையே கொரோனா உறுதி செய்யப்பட்ட 8 பேரில் கணவன்-மனைவி 2 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாநகர பகுதிக்கு இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான்சானியா நாட்டில் இருந்து பெருமாள்புரத்திற்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

    தொடர்ந்து அவருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் அதற்கான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் தனிமைப்படுத்தி டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டத்திலும் வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 500 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×