search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    கல்லூரி மாணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் மணிகண்டன்(வயது 20). கல்லூரி மாணவரான இவர் கடந்த 5-ந்தேதி நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வாகன சோதனையின்போது நிறுத்தாமல் சென்றதால் போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்து கீழத்தூவல் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட அவர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

    போலீசார் தாக்கியதில் தான் மணிகண்டன் இறந்ததாக கூறி உறவினர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இறந்த மாணவரின் தாயார் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், சம்பவத்தன்று எனது மகனை போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 3 மணி நேரத்திற்குமேல் விசாரணை நடத்தி உள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து எனது மகன் இறந்து விட்டான். எனது மகன் இறப்பதற்கு போலீசார் தாக்கியதுதான் காரணம்.

    3 மணி நேரம் விசாரணை நடந்தபட்சத்தில் 2 நிமிட சி.சி.டி.வி. வீடியோவை மட்டுமே போலீசார் வெளியிட்டுள்ளனர். எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே மகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், கல்லூரி மாணவர் மணிகண்டன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனைக்கு பின்பு மணிகண்டன் உடலை பெற்றுக்கொள்ள உறுதி கூற வேண்டும்.

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து இடுகாடு வரை போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×