search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேடல்
    X
    தேடல்

    வெளிநாடுகளில் இருந்து வேலூர் வந்த 17 பேரை தேடும் சுகாதாரத்துறை

    ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

    வேலூர் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் விவரங்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதில் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து 71 பேர் வேலூருக்கு வந்துள்ளனர். அதில் 42 பேர் கண்டறியப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

    அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 17 பேர் யார் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் வெளிமாநிலத்தில் இருந்து சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களையும் வேலூர் மாவட்ட கணக்கில் சேர்த்துள்ளனர். அவர்கள் தங்கியுள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி முகவரியை கூறியதால் அதிகமானதாக தவறாக கணக்கு காட்டியுள்ளனர்.

    வேலூர் மாநகர பகுதியில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் ஒரு சிலர் போலி முகவரி கொடுத்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    எனவே அவர்களின் ஆதார் எண்ணை பெற்று ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா? இல்லையா. கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்களா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் வீடுகளிலேயே 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பெங்களூரில் இருந்து வருபவர்கள் ஓட்டல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக கூட்டம் சேர்க்க கூடாது என ஓட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தனியார் ஆஸ்பத்திரியில் வெளிமாநிலத்தவர்கள் ஆதார் அட்டை முகவரியை வைத்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×