search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வழித்தட ஆக்கிரமிப்பினை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்ட காட்சி.
    X
    நீர்வழித்தட ஆக்கிரமிப்பினை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்ட காட்சி.

    மணப்பாறை அருகே ஏரியின் நீர்வழித்தட ஆக்கிரமிப்பு- 2 மணி நேரத்தில் அகற்றம்

    மணப்பாறையில் கனமழை பெய்த போதிலும் இந்த ஏரி மட்டும் நிரம்பவே இல்லை. நீர்வழித்தட ஆக்கிரமிப்பால் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கண்ட ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    மணப்பாறை:

    தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரம்புகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதற்கான ஆய்வுகளை நடத்துமாறு தலைமை செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாலும், ஏரி, குளங்களை பராமரிக்காமல் விட்டதன் விளைவாகவும் திருச்சி மாநகரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அதிக அழுத்தம் காரணமாக உடைப்பும் ஏற்பட்டது.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தன. 5 தினங்களுக்கு மேலாகியும் பல இடங்களில் தேங்கிய நீர் வடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இத்தனை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் முசிறி, வையம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் நீர் நிலைகளில் போதிய நீர்வரத்து இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறது.

    மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊரட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி அருகே 4.12 ஏக்கர் பரப்பளவு கொண்ட எட்டிமடை ஏரி ஒன்று உள்ளது. இது அருகாமையில் உள்ள தண்டல்க்காரன்பட்டி, ரெட்டியாபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

    மணப்பாறையில் கனமழை பெய்த போதிலும் இந்த ஏரி மட்டும் நிரம்பவே இல்லை. நீர்வழித்தட ஆக்கிரமிப்பால் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கண்ட ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    இதை அறிந்த வையம்படடி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா சுப்பிரமணியன் உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஏரியின் பரப்பளவு மற்றும் நீர்வழித்தடங்கள் குறித்து கேட்டறிந்தார். இதில் அருகாமையில் உள்ள எடையன்குளத்தின் உபரி நீர் வரும் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    உடனே அவர் பொக்லைன் எந்திரம் மூலம் 2,000 மீட்டர் தூரத்திற்கு வழித்தடத்தை தோண்டினார். இதையடுத்து தற்போது எட்டிமடை ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஊராட்சி தலைவரின் நடவடிக்கைக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். சமூக வலை தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    Next Story
    ×