search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியதால் 5000 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
    X
    வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியதால் 5000 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை- வைகை அணை நீர்மட்டம் 70 அடியை கடந்தது

    தேனி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை கடந்துள்ளது.
    ஆண்டிபட்டி:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வேகமெடுத்து பெய்யத் தொடங்கியது. தேனி, உத்தமபாளையம், கூடலூர், போடி, ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பல இடங்களில் மின் இணைப்பு தடைபட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 69.50 அடியில் நிலைநிறுத்தப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    அதிகபட்சமாக 7500 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தேனி, திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3205 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 4951 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5829 மி.கன அடியாக உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்மழை காரணமாக சுருளி, கும்பக்கரை ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வராக நதியிலும் நீர் அதிக அளவு செல்வதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 12.2, தேக்கடி 29.4, கூடலூர் 56.5, சண்முகாநதி அணை 71.5, உத்தமபாளையம் 69.9, வீரபாண்டி 119, வைகை அணை 25, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 15, கொடைக்கானல் 28.6, ஆண்டிபட்டி 25.6, அரண்மனைப்புதூர் 39.4, போடிநாயக்கனூர் 32.4, பெரியகுளம் 30, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.


    Next Story
    ×