search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காட்சி.
    X
    கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காட்சி.

    மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி- கடலூர் நகர் பகுதியில் படிப்படியாக வடியும் வெள்ளம்

    தென்பெண்ணை ஆற்றில் தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 18-ந் தேதி கடலூர்-விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. கடந்த 19-ந் தேதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் சென்றது.

    மாவட்ட எல்லையான அரசூர் முதல் வடிநில பகுதியான தாழங்குடா வரை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் வெள்ளம் புகுந்தது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம், குண்டுஉப்பளவாடி, தாழங்குடா, பெரியகங்கனாங்குப்பம், உச்சிமேடு உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    கடலூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்களையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்தது.

    அதன் பின்னர் மழை இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்ற மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் ஆறுகளில் செல்லும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதாலும், கடலூர் பகுதியில் தற்போது மழை பெய்யாததாலும், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
    Next Story
    ×