search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை தேவை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்.

    பருவமழையால் மாநிலத்தில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் சேதமான பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உதாரணத்திற்கு மேற்கு மண்டலத்தில் பெய்த தொடர் மழையால் வாழை சாகுபடி இலை சருகல் நோயால் பாதிப்படைந்துள்ளதற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.

    தூர்வாரியதால் கிளை வாய்க்கால்களில் நீர் செல்வதில் உள்ள தடைகளை களைய வேண்டும். தடுப்பணைகளின் கதவுகளை சரிசெய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அனைத்து சாகுபடி பயிர்களுக்கும், அனைத்து பருவத்திலும் கடன் வழங்கிட வேண்டும்.

    மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் தேவையான விதை, உரங்கள் வழங்கி, கடனுதவி செய்ய வேண்டும்.

    கடலை, சோளம், உளுந்து போன்ற தோட்ட பயிர்களுக்கும் கடன் வசதியை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கவும், விவசாயிகள் விவசாயம் செய்யும் பரப்பளவு முழுவதற்குமான கடன் வழங்கவும் முன்வர வேண்டும்.

    கடந்த பருவத்தில் பல மாவட்டங்களில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விடுவித்த பயிர்காப்பீடு இன்னும் கிடைக்காமல் இருப்பதால் அவர்களுக்கும் பயிர்காப்பீடு கிடைக்க வேண்டும்.

    கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் தட்கல் முறையில், முன்னுரிமை அடிப்படையில் வெளிப்படைத்தன்மையோடு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வேளாண்துறையின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும்.

    தமிழக அரசு வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற இவ்வேளையில் விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கவும், விவசாயத்தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பொதுமக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×