search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் ஆழியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணை கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்
    X
    தொடர் மழையால் ஆழியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணை கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்

    கோவை, நீலகிரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. நேற்று மாலை முதலே குன்னூர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல், வீடுகள் சேதம் அடைதல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன், அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. நேற்று மாலை முதலே குன்னூர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.

    இரவில் குன்னூர், ஓட்டுப்பட்டறை, பர்லியார், வண்டிச்சோலை, கோத்தகிரி, கோடநாடு, சோலூர் மட்டம் உள்பட அனைத்து இடங்களில் கனமழை பெய்தது.

    இந்த மழை இன்று காலை வரை விடாமல் தொடர்ந்து பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    மழை காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது. 43 அடி கொண்ட ரேலியா அணை தனது முழு கொள்ளவை எட்டியது. அணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

    கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, மசினகுடி, நெல்லியாளம், ஓவேலி, தேவர்சோலை, எருமாடு, நெலாக்கோட்டை, அம்பல மூலா, மண்வயல் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியதால் கூடலூர் பஸ் நிலைய சாலை, கூடலூர்- ஊட்டி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. வாகனங்கள் சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

    நீலகிரியில் இன்று காலையும் மழை நீடித்தது. மழையுடன் குளிரும் வாட்டி வதைத்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பனி மூட்டமாக காட்சியளிக்கிறது. காலை நேரமே இரவு போல் இருப்பதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், வால்பாறை, சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட புறநகர் பகுதிளிலும், மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், ரெயில்வே நிலையம், வடவள்ளி உள்பட அனைத்து பகுதிகளிலுமே விடிய, விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

    மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்த மழையால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×