search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமுல்லைவாசலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
    X
    திருமுல்லைவாசலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 10 ஆயிரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

    மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டத்தால் இன்று 1000 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த மீனவர்கள் சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் இன்றுமுதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை திருமுல்லைவாசலில் 1000 மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதேப்போல் பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி கிராமங்களிலும் மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மொத்தம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு, பைபர் படகு மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாட்டு படகு மீனவர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    இது குறித்து மீனவ கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கூறும்போது:-

    சுருக்கு மடி வலை மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தபோது ஏராளமான மீன்கள் கிடைத்தன. ஆனால் தடை காரணமாக வேறு வலையில் மீன் பிடிக்கிறோம். அதில் குறைந்தளவே மீன்கள் கிடைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1893-ன் படி கரையில் இருந்து 5 கடல் மைல்களுக்குள் எந்திரமாக்கப்பட்ட மீன்பிடி விசைப்படகை கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால் அந்த சட்டங்களை கண்டுகொள்ளாமல் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க கூடாது என்ற சட்டத்தை மட்டும் அமல்படுத்துவது ஏன்? என்று தெரியவில்லை.

    ஏற்கனவே கொரோனா காலத்தில் போதிய வருமானமின்றி தவித்து வருகிறோம். மீன்பிடி தடைகாலத்தில் அரசு வழங்கும் நிவாரணமும் போதவில்லை. இந்த சூழ்நிலையில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளையும் பயன்படுத்த கூடாது என்பதால் எங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம். இதனை தவிர வேறு வழியில்லை என்றார். தொடர்ந்து உண்ணாவிரதத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு ஆதரவாக இன்று வணிகர் சங்கம் சார்பில் திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பதற்கு ஆதரவாக நாகை மாவட்டம் நம்பியார் நகர் சமுதாய கூடத்திலும் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் ஏராளமான மீனவ கிராம பெண்களும் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டத்தால் இன்று 1000 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்களின் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் உண்ணாவிரதம் நடந்து வரும் 5 இடங்கள் மற்றும் மீனவ கிராமங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் நம்பியார் நகரிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×