search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனின் தாய் திலகவதி, கவிதா, பாக்கியலட்சுமி
    X
    சிறுவனின் தாய் திலகவதி, கவிதா, பாக்கியலட்சுமி

    பேய் விரட்டுவதாக சிறுவன் அடித்து கொலை- தாய் உள்பட 3 பேர் கைது

    பேய் விரட்ட எடுத்த நடவடிக்கையால் மகன் இறந்து விட்டானே என்று அவரது தாய் கதறி அழுதார்.
    கண்ணமங்கலம்:

    வேலூர் அடுத்த அரியூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி திலகவதி (வயது 35). தம்பதியின் மகன் சபரி (7). கார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சபரி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    மேலும் சில நாட்களாக கண்கள் இருண்டு மிகவும் சோர்வாக இருந்துள்ளார். சில நேரங்களில் அலறல் சத்தமும் போட்டுள்ளார். இதனால் தாய் திலகவதி சபரிக்கு பேய் பிடித்ததாக கருதினார். சபரியை பார்த்த சிலர் அவனுக்கு பேய் பிடித்துள்ளது. பேயை வந்தவாசியை சேர்ந்த ஒருவர் விரட்டி விடுவதாக கூறியுள்ளனர்.

    இதை நம்பியதாய் திலகவதி மகன் சபரியை அழைத்துக்கொண்டு தனது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோருடன் வந்தவாசிக்கு ஆட்டோவில் சென்றார்.

    வந்தவாசி செல்ல போதிய பணமில்லை என்பதால் ஆட்டோ டிரைவர் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் 4 பேரையும் இறக்கி விட்டுச் சென்றார்.

    அதற்குள் நள்ளிரவு நேரமாகிவிட்டதால் 4 பேரும் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு வலிப்பும், மூச்சு திணறலும் அதிகமாக வந்தது.

    இதனால் திகைத்துபோன 3 பேரும் சபரியின் உடலில் பேய் உள்ளது. அவனை அடித்தால் பேய் ஓடிவிடும் என்று கருதி சிறுவனை தாக்கினர். அவனது கழுத்தை நெரித்துள்ளனர்.

    ஏற்கனவே மூச்சு திணறல் மற்றும் வலிப்பால் உடல் சோர்வடைந்த நிலையில் இருந்த சபரி இவர்களின் பேய் விரட்டும் நடவடிக்கையால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

    அப்போதுதான் அவர்கள் 3 பேருக்கும் சிறுவன் இறந்து விட்டது தெரியவந்தது. 3 பேரும் சிறுவன் உடலை பார்த்து கதறி அழுதனர். பேய் விரட்ட எடுத்த நடவடிக்கையால் மகன் இறந்து விட்டானே என்று அவரது தாய் கதறி அழுதார். அவர்கள் அடித்ததில் சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள். சிறுவனின் பிணத்தை பார்த்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறினர்.

    சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திலகவதியின் சொந்த ஊர் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பம். தற்போது வாடகை வீட்டில் அரியூரில் வசித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    சிறுவனின் தாய் திலகவதி மனநிலை பாதிப்படைந்தவர் போல் உள்ளார். அவரிடமும் கவிதா, பாக்கியலட்சுமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×