என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூரில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்வு

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதம் வரை தினமும் 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர் சில நாட்களாக நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரித்தது. கடந்த வாரங்களில் ஒரேநாளில் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்து ஒரே நாளில் 137 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 21 ஆயிரத்து 912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 355 பேர் பலியானார்கள்.

    தற்போது 400 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் வேலூர் காந்தி ரோட்டில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவர்கள் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகர பகுதியில் இன்று 50-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிசோதனை செய்ததில் இன்று 2 மடங்காக உயர்ந்துள்ளது.

    இது தவிர தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓட்டு பதிவின் போது கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளது‌. பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பெரும் பாதிப்பை தடுக்க முடியும்.

    இதேபோல் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 2500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    Next Story
    ×