search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங். நீடிக்குமா?- புதுவையில் மும்முனைப்போட்டி

    கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரசை தலைமை தாங்கவோ, முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தவோ பா.ஜனதா முன்வராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி விலகி தனி அணியாக போட்டியிட வாய்ப்புள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தனித்து போட்டியிட தயாரானது.

    இதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சனை புதுவை பொறுப்பாளராக நியமித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வியூகமும் வகுத்தனர். ஜெகத்ரட்சகனும் புதுவைக்கு வந்து தெற்கு, வடக்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.

    இதனிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை. புதுவையில் தி.மு.க.வை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என ராகுல்காந்தியும் பிரசாரத்தில் தெரிவித்து வருகிறார்.

    இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஓரணியாக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகியவை தேர்தலுக்கு பிறகு கூட்டணியாகி விட்டனர். பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி நீடித்தது. தற்போதும் பா.ஜனதா கூட்டணியில்தான் என்.ஆர். காங்கிரஸ் நீடிக்கிறது என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வருகிற 31-ந்தேதி புதுவைக்கு வரும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    புதுவையை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி. கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும் என கட்சியின் நிறுவனர் ரங்கசாமி விரும்புகிறார்.

    அதேநேரத்தில் பா.ஜனதாவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநில தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளதால் கூட்டணியில் எந்த கட்சி தலைமை வகிப்பது? முதல்-அமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

    ஒருவேளை கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரசை தலைமை தாங்கவோ? முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தவோ பா.ஜனதா முன்வராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி விலகி தனி அணியாக போட்டியிட வாய்ப்புள்ளது.

    காங்கிரஸ் தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும், என்.ஆர். காங்கிரஸ் தனி அணியாகவும் தேர்தலை சந்திக்கும். இதனால் மும்முனை போட்டி உருவாக வாய்ப்புள்ளது.

    Next Story
    ×