என் மலர்
செய்திகள்

முதல்-அமைச்சர் நாராயணசாமி
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த சதி- நாராயணசாமி புகார்
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள். தொகுதி வாரியாக கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக இளைஞர், மாணவர் காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் எங்களிடம் தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பங்களை விளைவிக்க சதி வேலை செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






