search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    2 குழந்தைகளை ஊருணி தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய் கைது

    தனிக்குடித்தனம் அழைத்து செல்லாததால் ஆத்திரத்தில் 2 குழந்தைகளை ஊருணி தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நெய்வயல் ஊராட்சியை சேர்ந்த நாச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர், ரெங்கசாமி. அவருடைய மகன் கணேசன் (வயது 33). விவசாயி. அவருடைய மனைவி சோனியா (27). இவர்களுக்கு நியா சந்தோஷிகா (3), சாய் கிருத்திகேசன் (1) ஆகிய 2 குழந்தைகள்.

    கணேசன் கூட்டுக்குடும்பமாக தனது பெற்றோர் மற்றும் சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் அனைவரும் வீட்டில் தூங்கிய நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் உள்ள சிலர் எழுந்து விவசாய வேலைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, கணேசனின் 2 குழந்தைகளையும் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் உள்ள மற்றவர்கள் பதற்றமாக இருந்தநிலையில், குழந்தைகளின் தாயான சோனியா மட்டும் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அணிந்து இருந்த ஆடையும் ஈரமாக இருந்துள்ளது. அவரிடம், “குழந்தைகள் எங்கே?” என்று கேட்ட போது அவர் பதில் ஏதும் கூறாமல் இருந்துள்ளார்.

    உடனே சந்தேகத்தின் பேரில் வீட்டின் அருகே உள்ள ஊருணி பகுதிக்கு தேடிச்சென்ற போது, அங்கு நியா சந்தோஷிகா, சாய் கிருத்திகேசன் ஆகிய 2 குழந்தைகளும் பிணமாக மிதந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் கணேசனின் குடும்பத்தினர் கதறிய சத்தத்தை கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார், கணேசன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சோனியா தனது 2 குழந்தைகளையும் ஊருணி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கணேசனின் தாயார் போலீசாரிடம் கூறுகையில், “எனது குடும்பம் கூட்டுக்குடும்பம். எனக்கு ராஜேஷ்கண்ணன், கணேசன் உள்பட 3 மகன்கள். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. கணேசன் மட்டும் குடும்பத்துடன் விவசாயத்தை கவனித்து வந்தான். மற்ற இருவரும் குடும்பத்துடன் சென்னையில் தொழில் செய்து வந்தனர்.

    கொரோனா பிரச்சனையால் மூத்த மகன் ராஜேஷ்கண்ணன் குடும்பத்துடன் ஊருக்கு வந்து, எங்களுடன் வசித்து வருகிறான். இதையடுத்து, மருமகள் சோனியா கூட்டுக்குடும்பத்தில் என்னால் இருக்க முடியாது. தனிக்குடித்தனம் சென்று விடுவோம், என அடிக்கடி கணேசனிடம் கூறினாள். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு நடந்தது. அப்போது, சோனியா, தனிக்குடித்தனம் வராவிட்டால் குழந்தைகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன், என அடிக்கடி மிரட்டினாள். இதை அப்போது என் மகன் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அவள் இவ்வாறு 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொன்றுவிடுவாள் என நாங்கள் நினைக்கவில்லை”என்றுதெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் சோனியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதிகாலையில் வீட்டில் யாரும் எழுவதற்கு முன்பாகவே தூக்கத்தில் இருந்த 2 குழந்தைகளையும் ஒவ்வொருவராக தூக்கிச் சென்று ஊருணி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக சோனியா தெரிவித்தார். அதன் அடிப்படையில் சோனியாவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×