search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் வனப்பகுதியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்கும் காட்சி
    X
    மாணவர்கள் வனப்பகுதியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்கும் காட்சி

    ஆன்லைன் வகுப்பு- செல்போன் சிக்னலுக்காக வனப்பகுதிக்குள் செல்லும் மாணவர்கள்

    ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக மாணவர்கள் வனப்பகுதிக்குள் செல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் நிலவுகிறது.
    கூடலூர்:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னலை தவிர பிற தனியார் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து செல்போன் சிக்னல்களும் முழுமையாக கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி சென்று, அங்கிருந்து கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

    கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒவேலி பேரூராட்சியிலும் செல்போன் சிக்னல் முடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மேடான இடத்துக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று, கல்வி பயின்று வருகின்றனர். இதேபோன்று கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூர்வயல் பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படிக்கும் அவல நிலையை காண முடிகிறது. இதனால் எந்த நேரத்திலும் வனவிலங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி மாணவர்கள் சென்று படிக்கும் சூழல் காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் மேடான பகுதிக்கு செல்வதால், வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கூடலூர் பகுதியில் செல்போன் சிக்னல் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×