search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்- துரைமுருகன் உள்பட 2000 தி.மு.க.வினர் மீது வழக்கு

    வேலூரில் வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துரைமுருகன் உள்பட 2000 தி.மு.க.வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமது சகி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தயாநிதி, சாமிக்கண்ணு மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், திராவிடர் கழக தமிழர் இயக்க பேரவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, திருவலம் உள்பட 27 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் உள்பட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியது, போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் செய்தது, கொரோனா பரவல் இருப்பது தெரிந்தும் அதிகளவில் கூட்டத்தை கூட்டியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, பேரிடர் கால விதிமீறல் என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வாணியம்பாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கதிர்ஆனந்த் எம்.பி. பங்கேற்றார். அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



    Next Story
    ×