search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் (கோப்புப்படம்)
    X
    மாணவர்கள் (கோப்புப்படம்)

    புதுவை, காரைக்காலில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி- கல்வித்துறை அறிவிப்பு

    புதுவை, காரைக்காலில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அனைத்து வகுப்புகளின் இறுதி தேர்வும், கல்லூரியில் இறுதி பருவம் தவிர மற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், கல்வித்துறை செயலாளர் ருத்ரகவுடு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



    இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக புதுவை கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவுபடி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். அதேபோல் 9-ம் வகுப்பு மற்றும் 11- ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மதிய உணவை கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகளில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். மாணவர்களிடையே போதிய சமூக இடைவெளியையும் பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தினந்தோறும் ஆய்வு செய்வது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×