என் மலர்
செய்திகள்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்கள் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் அதற்கடுத்த நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று காரணமாக 192 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த ஜூன் மாதம் நெல்லையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது சிதம்பரம் ஒருவர் ஆவார். அதன்பிறகு காவல்துறையில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும் அனைவரும் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு நெல்லையில் கொரோனாவுக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பலியாகி உள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த வாரம் வைரஸ் காய்ச்சல் மற்றும் இதய துடிப்பு அதிகரிப்பு காணப்பட்டது. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முதலில் முடிவு வந்தது.
ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், சி.டி. ஸ்கேன் பரிசோதனை நடத்தினர். இதில் அவருக்கு கொரோனா தொற்றினால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முருகனுக்கு கொரோனா தொற்றுக்கும் இதய துடிப்பு சீராகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 2-வது போலீஸ் அதிகாரி இவர் ஆகும். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது.
இதுபோல தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் கொரோனாவுக்காக, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.