search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட கணேசனின் உடல்
    X
    கொலை செய்யப்பட்ட கணேசனின் உடல்

    லால்குடி அருகே காதல் பிரச்சினையில் கார் டிரைவர் ஓட, ஓட விரட்டி குத்திக்கொலை

    லால்குடியில் காதல் பிரச்சினையில் கார் டிரைவரை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை செய்த அரசு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    லால்குடி:

    லால்குடியில் காதல் பிரச்சினையில் கார் டிரைவரை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை செய்த அரசு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருச்சி மாவட்டம் லால்குடி சுண்ணாம்புக்காரை தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற கணேசன் (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு ஆகாஷ் (21) என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

    லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் ரோஸ் கார்டன் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர் தஞ்சையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் தர்ஷினி (19). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

    இந்தநிலையில் ஆகாஷ்-தர்ஷினி இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தர்ஷினியின் பிறந்தநாள் அன்று, ஆகாஷ் தனது காதலியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியதாக தெரிகிறது. இதை தர்ஷினியின் தந்தை பார்த்துவிட்டார்.

    உடனே அவர், தனது மகளையும், அவளுடைய காதலனையும் கண்டித்துள்ளார். அத்துடன் ஆகாசின் தந்தை கணேசனிடம், மகனை கண்டித்து வைக்கும்படியும், தனது மகளுடனான காதலை கைவிடும்படியும் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கணேசன், தர்ஷினியை தனது மகனுக்கே திருமணம் செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். இரு குடும்பத்திற்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் செல்வகுமார், தனது நண்பர் நாகராஜ் (45) என்பவரை அழைத்து சென்று கணேசனிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கீழவீதி மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த கணேசனை நாகராஜுடன் சென்று செல்வக்குமார் சந்தித்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கணேசனின் கழுத்து, இடுப்பில் குத்தினார். இதனால் அங்கிருந்து கணேசன் தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விடாமல் அவரை விரட்டிச்சென்று கணேசனின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த கணேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், செல்வகுமாரின் மகளை, தனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க கணேசன் கூறியதால், ஆத்திரத்தில் அவரை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரையும், நாகராஜையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×