என் மலர்
செய்திகள்

நகை கொள்ளை
சென்னை புளியந்தோப்பில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
சென்னை புளியந்தோப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திரு.வி.க.நகர்:
சென்னை புளியந்தோப்பு அம்மையம்மன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜூனை(வயது 24). இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த முகமது ஜூனை, இரவு 7 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் பெரம்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இரவு 9.30 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது.
பீரோவில் பார்த்தபோது அதில் வைத்து இருந்த 90 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
முகமதுஜூனை குடும்பத்தினருடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story