என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆலங்குடி அருகே நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மருத்துவராகும் கனவில் இருந்த மாணவி, நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் தற்கொலை செய்துகொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கணேசன் மகள் ஹரிஷ்மா (வயது 17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

    படிப்பில் சிறந்த மாணவியாக இருந்த ஹரிஷ்மா டாக்டராக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக அவர் உரிய முறையில் விண்ணப்பித்தும் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு இவருடன் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வந்துள்ளது. ஆனால் ஹரிஷ்மாவிற்கு வரவில்லை. இதனை தனது தாயிடம் சொல்லி புலம்பி உள்ளார்.

    தாயார் ஆறுதல் கூறியும் ஏற்க மறுத்த ஹரிஷ்மா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த ஹரிஷ்மா வயலுக்கு தெளிக்க தந்தை வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஹரிஷ்மாவை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஆலங்குடி போலீசில் மாணவியின் தந்தை கணே சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நீட் தேர்வில் தோல்வியடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு தமிழகத்தில் பல மாணவிகள் நீட் தேர்வு தோல்வி மற்றும் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் பலியாகும் உயிர்ப் பலி அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×