என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்
    X
    ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

    கடைகளுக்குள் சமூக இடைவெளி 2 மீட்டர் கடைபிடிக்க வேண்டும்- ஆணையாளர் உத்தரவு

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளுக்குள் சமூக இடைவெளி 2 மீட்டர் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜேஷ், ஜிப்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ஆணையாளர் இளங்கோவன், ஈரோட்டில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினார். இந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆலோசனையின்படி ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் செய்யப்படும் அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல, முகக்கவசம் இன்றி சாலைகளில் நடமாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். எனவே வணிக நிறுவனங்கள், கடைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    ஈரோட்டில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் வைக்கப்பட வேண்டும். அந்த வாசகம் சம்பந்தப்பட்ட கடைக்கு வருபவர்களுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து கடைகள் நிறுவனங்களின் முன்பு சோப்பு தண்ணீர் பக்கெட் (தண்ணீர் வசதி) இருக்க வேண்டும். கடைகளுக்குள் செல்பவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை கண்காணிக்க வேண்டும்.

    முகக்கவசம் அணிந்து இருப்பவர்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையே சமூக இடைவெளி 2 மீட்டர் இருக்க வேண்டும். இதனை அனைத்து கடைகள், நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும்போது இந்த நடைமுறைகளை செயல்படுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறினார்.

    ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிருபர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோர் கூறும்போது, ஆணையாளரின் ஆலோசனைகளை ஏற்று அனைத்து கடைகளும் இயங்கும் என்றார்கள்.
    Next Story
    ×