search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறப்பு

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சளி மாதிரிகள் எடுத்து, கொரோனா பரிசோதனைக்காக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அங்கு திடீரென கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் இருந்து கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, முடிவுகள் கிடைக்க பெற்று வந்தன.

    இதற்கிடையே பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியதால் ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் கிடைக்க 2 முதல் 3 நாட்கள் ஆகிறது. இதனால் தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட அனுமதிக்கும்படி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு(ஐ.சி.எம்.ஆர்.) கடிதம் அனுப்பினார். இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஊட்டியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று முதல் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறந்து, செயல்பட தொடங்கியது. நீலகிரியில் எடுக்கப்படும் மாதிரிகள் ஊட்டியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 270 மாதிரிகளுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்கான நவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளன. இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கும். இருப்பினும் தினமும் 600 அல்லது 700 நபர்களுக்கு மேல் சளி மாதிரிகள் எடுப்பதால், கோவையில் உள்ள ஆய்வகத்துக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 21 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடந்து உள்ளது.
    Next Story
    ×