search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X
    பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    வங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வங்குடி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வாங்கி பயன் பெறுவதற்காக நரசிங்கபாளையம் கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. வங்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு சென்று தான் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் நரசிங்கபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த முழு நேர ரேஷன் கடையை, தற்போது வங்குடி கிராமத்தில் பகுதி நேர கடையாக மாற்றப்பட்டு அங்கு உள்ள சேவை மையத்தில் கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மாதம் அந்த பகுதி நேர ரேஷன் கடை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் வங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாரதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். நரசிங்க பாளையத்திலும் ரேஷன் கடையை திறக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    Next Story
    ×